Tuesday 18 August 2009

8.காரணம் - காரியம்


ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (Karya)என்னும் வேற்றுமொழிச்சொல்லும் காரணம்,காரியம் என்று தமிழில் திரிந்தாகக் கூறுவார்கள்.காரண காரியம் என்பதை தூண்டுதலும் துலங்கலும் Cause and Effect எனக் கூறலாம். ஒரு செயலைச் செய்வதற்கான மூலம் (Essential element) தேவைப்படுகிறது.அம்மூலத்தின் விளைவாக செய்கை (Action) நிகழ்கிறது.காரணம்,காரியம் என்னும் சொற்கள், தமிழ்ச்சொற்கள் என்பதை விரிவாக காணலாம்.

மழை பெய்வதால் ஏரி,குளம் போன்ற நீர்நிலைகள் நிறைகின்றன.இது காரியம் ஆகும். நீர்நிலைகள் நிறைய முகில் கூட்டங்களே மூலமாய் உள்ளன. இது காரணம் ஆகும்.எளிமையான இந்த எடுத்துக்காட்டில் அடங்கியிருக்கும் ஆழமான பொருளை நோக்கலாம்.கார் என்பது, மழை,முகில் என்ற பொருளைத் தரும் தமிழ்ச்சொல்லாகும்.



கரு ‍- கருமை - கார் என விரியும்.
கார்காலம் = மழைக்காலம்
கார்முகில் = கரியமுகில்
கார் என்னும் தமிழ்ச்சொல்,சொல்லப்படும் இடத்திற்கேற்றவாறு,முகில்,மழை என்னும் பொருள் கொள்ளப்படும்.

அணம் என்ற சொல்லுக்கு உயர்வு,மேலே (Up,High)என்றவாறு தமிழில் பொருளுண்டு.
அன் என்ற மூலச்சொல்லின்று அணம்,அணா,அன்னம்,அண்ணி,அண்ணன்,அண்ணல் போன்ற சொற்கள் விரிவடைகின்றன.

அணா - அன்னம் : மேல்வாய்
அண்ணன் - உடன் பிறந்தவரில் மூத்தவர்
அண்ணல் - உயர்ந்தவர்
அணிகம் - உயர்ந்த பல்லக்கு
அணா -அணி :உடலின் மேலே அணியும் ஆடை,நகை

கார்+அணம்

கார் - முகில்
அணம் - மேலே
மேலே உள்ள முகில் கூட்டம் மழை பெய்ய காரணம் ஆகிறது.

அயம் என்பது நீர்நிலை,குளம்,ஏரி என விரியும்
கார் அயம் = நீர் நிறைந்துள்ள குளம்.

யா என்பது நீரைக் குறித்த தொல்தமிழ்ச்சொல்லாகும்.
யா - யம் - அயம் என விரிந்தது.

அயம் = தமிழில் சொல்லப்பட்ட நீர்நிலைக்கான சொல்.

யம் (Yam) = ஏரி,கடலைக் குறித்த எகிப்தியச்சொல்.

யா(Ea) = கடலைக் குறித்த பாபிலோனியச் சொல்.

யா என்றே தொல் தமிழ்ச்சொல்லின்றே , யம் - அயம் போன்ற சொற்கள் விரிந்தன.

கார் அணம் = நீர் தோன்றுவதற்கான மூலம் ( Cause,Origin,Source)

கார் அயம் = மூலத்தின் செயல்பாட்டு விளைவு (Operation)

வானத்தில் கார் முகில் தோன்றுவது காரணம்

நிலத்தில் மழையாகப் பொழிவது காரியம்

கார்+அயம் என்பது காரயம் எனப்படும்.
காரயம்,காரியம் எனவும் திரியும்.

மழையும்,முகிலையும் எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு உருவான தமிழ்ச்சொற்களே காரணம், காரியம் என்பனவாகும்.

( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரை )

Monday 3 August 2009

7.அகிலாண்டம்



சிவனின் மனைவியாகிய பார்வதிக்குள்ள பல பெயர்களில் அகிலாண்டேசுவரி என்பதும் ஒன்றாகும். அகிலம்+அண்டம்+ஈசுவரி என்ற முச்சொற்களின் கூட்டே அகிலாண்டேசுவரி என்பதாகும்.அகிலம் என்பது வேற்றுமொழிச்சொல் ,அதுவே அகில் ( Akil அல்லது Ahil ) என்று சொல்லப்படதாகவும் கூறப்படும். தமிழ்நாட்டிலுள்ள தேசிய இயக்கங்களாகத் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள், அகில பாரத என்றும், அகில இந்திய என்றும் சொல்வதைக் காணலாம். அகிலம் என்ற சொல் , விரிந்த - பரந்த - எல்லாம் என்ற பொருளில் விரியும்.

அகிலாண்டம் - விரிந்து பரந்த உலகம்

அகிலாண்ட கோடி - எண்ணிலடங்கா உலகம் ( வானம், வீண்மீன்கள், கோள்கள் உள்ளிட்டவை )

அகண்டம் - விரிந்த பரப்பளவைக் கொண்டது.

கண்டம் x அகண்டம் என்ற எதிர்மறைப் பொருளில், அகண்டம் சொல்லப்பட வில்லை.

கண்டம் என்னும் தமிழ்ச்சொல்லே , குமரிக்கண்டம் என்று சொல்லப்பட்டதை நோக்குக.

கள் - காண் என்ற மூலத்தமிழ்ச்சொற்களிலிருந்து பல்வேறு சொற்கள் விரிந்துள்ளன.

கள் - காண் - காணி = கண்ணால் பார்க்கப்படும் நிலப்பகுதி

காண் - காட்சி = பார்வை, தோற்றம் என்றவாறு விரியும்

கண் - காண்டல் - காதல் = பார்வையால் பரிமாறப்படும் அன்பு

கண் - கண்ம - காண்மம் - காமம் = பார்த்த பின் விரும்புவது,விருப்பம்

கல் என்பதற்கு இடம், பகுதி என்ற பொருளும் உண்டு.

கல் - கண்டம் = விரிந்த பகுதி
அகண்டம் = மேலும் மேல் விரிந்த பகுதி

அட்டம் = அண்மையிலுள்ளவை
அகண்டம் = தொலையில்லுள்ளவை

அகண்டம் என்பது அகல் என்ற சொல்லின் நீட்சியே

அகல் = ஒரிடத்தை விட்டுச் செல்லுதல், விரிவடைதல்,எங்கும் பரவி நிற்றல் ( Leave, Increase,Spread etc )

அகல் - அகலம் = விரிவடைதல் ( Breadth , Width, Extension )

அகலிடம் = அகன்று விரிந்துள்ள உலகம்

அகல் - அகில் = எங்கும் பரவும் மணம்

அகல் என்னும் தமிழ் மூலச்சொல், அகில் என்னும் சொல்லப்பட்டது.

கல் = ஒரிடத்தில் நிலையாக நிற்பது, மலையைக் குறிக்கும்

அகல் = நிலையாக நிற்காமல் விரிந்து செல்வது

கல் x அகல் எதிர்மறைப் பொருள் தமிழில் சொல்லப்பட்டத்தை நோக்குக.

இன்னும் விரிவாக

கட்டு = ஒன்று சேர்

குச்சியைக் கட்டு, காலைக் கட்டு என்பதைப் பார்க்கவும்

அகட்டு = விரி

காலை அகட்டு = காலை விரி

கட்டு x அகட்டு தமிழிலும் எதிர்மறைப் பொருள் உண்டு என்பது உறுதியாகிறது.

அகல் - அகில் - அகிலம் = உலகம்

அகண்டம் - அண்டம் எனவும் சுருங்கும்

அண்டா = அகன்ற பாத்திரம்

அகிலம்+ அண்டம் = அகிலாண்டம் = பேரண்டம் ( Universe )

அகிலம் (உலகம் ) வட்ட வடிவமானது கோள வடிவமானது என்னும் கருத்தில், கண் என்ற உறுப்புடனும் இணைக்கப் பட்டது.

அதனால் தான் கண்ணுக்கு அக்கி என்னும் சொல்லும் வழங்கப்பட்டது.

அகிலம்,அண்டம்,கண்டம், காண்டம், அகிலாண்டம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச்சொற்களே. அவை சிற்சில ஒலிப்பு மாற்றங்களுடன் தமிழின் திரிமொழிகளில் திரிந்துள்ளன என்பதை உணர வேண்டும்.


( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரை )

இது தொடர்பான இன்னொரு கட்டுரை ; கற்கண்டு

Tuesday 30 June 2009

6.இதர


(இதர என்பது தமிழ்ச்சொல்லே)
----------------------

ஆட்சிமொழி ஆணையத்தில், மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது,
" இதர " என்னும் சொல்லைப் பயன்படுத்தலாமா என்னும் கேள்வி எழுந்தது.அந்தச் சொல் வடசொல்லாக இருப்பதால் , அதனை அறவே விலக்க வேண்டும் என்று அனைவரும் கருத்துத் தெரிவித்தனர். அப்போது, " இது தமிழ்ச்சொல்தான் , ' இதுதவிர ' என்னும் சொல்லே
" இதர " என்று சுருங்கியுள்ளது " என்று சொன்னேன். இராமலிங்கனார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.சமயம் நேரும் போதெல்லாம் நண்பர்களுக்கு இதனை மீண்டும் மீண்டும் எடுத்துக்கூறி என்னைப் பாராட்டி மகிழ்வார்.

( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )

5.திசை


( திசை என்பது தமிழ்ச்சொல் என்பதை விளக்கும் இடுகை )



உணவு சமைப்பதற்கும் , இரவில் விலங்குகளை விரட்டுவதற்கும் தீ தேவைப்பட்டது. அந்தத் தீயைத் தான் அதாவது கதிரவனைக் கடவுளாக ஆதிமாந்தன் கண்டான் என்பதைப் பார்த்தோம்.

ஒரு பொருளின் அழகையோ அல்லது பெருமையோ சொல்ல வேண்டுமெனில் இன்னொரு பொருள் இருக்க வேண்டும் என்பது அகிலத்தின் அழியா விதி.

அப்படி தான் சிலரின் அருமையும் ,பெருமையும் இருக்கும்போது தெரிவதில்லை.இறப்பிற்குப் பின் தான் உணர்கின்றோம்.

ஒருவர் இறந்துவிட்டார் என்பதைத் தலை சாய்ந்துவிட்டது என்றும், மரம் விழந்துவிட்டதை மரம் சாய்ந்துவிட்டது என்றும், நேராக உட்காராமல் இருப்பவரைச் சாய்யாமல் நேராக உட்காரு என்றும் கூறுகின்றோம்.

தீயின் ( கதிரவன்) பெருமையை அதாவது காலையில் தோன்றுவதை, மாலையில் சாயும் போது தான் அதாவது மறையும் போது தான் ஆதிமாந்தன் உணர்ந்தான்.

தீ சாய்வதை அதாவது கதிரவன் மறைவதைத் தீச்சாய் என்றான்.

அதுவே நாளடைவில்

தீச்சாய் - தீச்சாய் - தீசாய் - தீசய் - திசய் - திசை என்றும்,

தீச்சாய் - தீச்சாய் - தீசாய் - தீசா - திசா என்றும் ஆனது.


கதிரவன் ( தீ ) மறைவதை அடிப்படையாக சொல்லப் பட்டதே திசை அல்லது திசா என்பதாகும்.அது பின் கதிரவன் உதிக்கும் மறைக்கும் பக்கத்தைக் குறிக்கும் சொல்லானது.

இன்றும் பள்ளிகளில்,

சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்றும்

சூரியன் மறையும் திசை மேற்கு என்றும்

படிக்க காண்கின்றோம்.

கதிரவன் மாலைப் பொழுது சாயங்காலம், சாய்ந்திரம் என்றும் அழைக்கப்பட்டது, சாய்வு என்னும் சொல்லின் அடிப்படையில் தான்.

திசை என்பதற்கு ஆங்கிலத்தில் " direction " என்று சொல்கின்றோம். அந்தச் சொல்லும் தீ ( de ) என்னும் சொல்லின் வழியில் வந்த சொல் தான்.


( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரையைத் தழுவி எழுதப் பட்டது )

Sunday 28 June 2009

4.அந்தி


( அந்தி என்பது அருமையான தமிழ்ச்சொல் தான் )

காலையில் தோன்றும் கதிரவனைக் கண்ட மாந்தன் அதை ஆதி என்று அழைத்தான்.மாலையில் அந்தத் தீ (கதிரவன்) அணைவதை(மறைவதை)க் கண்டான்.



இப்பொழுது அமைதி என்ற சொல்லைப் பார்ப்போம். எவ்வித சலனமின்றி, சத்தமின்றி இருக்கும் நிலையை அமைதி
என்கின்றோம்.ஆனால் அதற்கு உண்மையான பொருள் அது அன்று.




மகாத்மா காந்தி அவர்கள் " ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருக்கலாம் ,அதற்காக அமைதி இருக்கிறது; மகிழ்ச்சியாக இருக்கிறது என்பது பொருள் அன்று " ஒருமுறை சொன்னதாக நினைவு.



இன்று ஈழத்தில் அமைதி நிலவின்றது என்பதற்காக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்று பொருள் இல்லை.



அப்படி என்றால் அமைதியின் உண்மையான பொருள் என்ன ? ஆனந்தம் இருக்க வேண்டும்; அழகு இருக்க வேண்டும்; ஒழுங்கு இருக்க வேண்டும் என்பது தான்.




இதை இன்னும் விளக்கமாக விரிவாகச் சொல்ல வேண்டுமெனில் சுவாமி விவேகானந்தரின் Peace என்னும் தலைப்பில் கவிதை வரிகளைப் படித்துப் பாருங்கள். ( மொழியாக்கம் jataayu அவர்கள் )




அறிந்து கொள் நண்பா
ஆற்றலிடம் மட்டுமே வரும்
அமைதி

சக்தியாய்த் தோன்றாத சக்தி
இருளில் இருக்கும் ஒளி
ஒளிப்பிழம்பின் நிழல்
அமைதி

பேசாத பேருவகை
சோகப் படாத பெரும் துக்கம்
வாழாத அமர வாழ்வு
அஞ்சலி பெறாத முடிவில்லா மரணம்
அமைதி

இன்பமும் அல்ல துன்பமும் அல்ல
இடைப்பட்டது அமைதி
இரவும் அல்ல பகலும் அல்ல
இவற்றை இணைப்பது அமைதி .

அமைதி என்பதற்கு அழகான, சத்தமற்ற என்ற பொருள் விளக்குகிறது.மேலும் அம் என்பதற்கு (சத்தம்)அற்றுப் போன மற்றும் அழகு என்பதும் விளங்குகிறது.



அம்மணம் என்கின்றோம். அப்படி என்றால் ஆடையற்ற நிலையைத் தானே.இங்கும் அம் என்பதற்கு அற்றது என்பது பொருள் விளங்குகிறது. அம் என்பதற்கு அழகு என்னும் பொருள் உண்டு. அதனால் தான் அதை இரசிக்க விழைக்கின்றோமோ ???????!!!!!!!!!!.




அம் என்பதற்கு அழகு என்னும் பொருள் உண்டு தமிழில் . அதை விளக்கமாக விரிவாக காண்போம்.

அம்புலி - அழகுடைய நிலவு

அம் + உலி = அம்புலியாற்று ; உல் - உல - உலி என்க ; உலா வரும் நிலவு என்பதே.

அம்முலி என்ற மூலச்சொல், தொன்மை காலச்சொல் அம்புலியாற்று.



அம்பனத்தி = அழகிய கொற்றவை

அம்பட்டன் = அம் + பட்டன்

நாடி பார்ப்பதற்குப் பயன் பயன்படுத்தப்படும் பட்டுத்துணியைக் கையில் வைத்திருப்பவன்.
மருத்துவன் தாழ்ந்த சாதி என்பது இனக்கொழுப்பால், அதிகாரத்தை அடைய நினைத்தவர்களால் ஏற்பட்டது.அந்தணர்கள்,செல்வந்தர்களுக்கு நாடி பார்க்க பட்டுத்துணியை கையில் விரிக்கும் பார்க்கும் வழக்கமிருந்தது.

அழகிய பட்டுத்துணியை வைத்து நாடி பார்த்தவன் அம்பட்டன் எனப்பட்டான். அம்பட என்பது இச்சொல்லின் திரிச்சொல்லாகும்.

அம்பட்டன் என்பது அழகான மீன் பெயராகும்.




இவ்வாறு அம் என்பதற்கு அழகு என்னும் பொருளில் தமிழில் சொற்கள் உருவாயின.

பொத்தானை அமுக்கு என்று சொல்ல கேட்கின்றோம்.



இன்னும் காலை அமுக்கு, கையை அமுக்கு,விளக்கு அணைந்து(அமுங்கி)ப் போச்சு என்று விளம்புக்கின்றோம்.
இன்று உள்ள சூழ்நிலையில் ஆயிரம் சிக்கல்கள் அமுக்க, அதை அமைதியாக அழகான தீர்க்கத் தெரியாமல் அழுத்தத்திற்கு (depression) ஆளாகின்றோம்.



அமுக்கமாக இருத்தல் என்றால் வெளியே செய்தியை வராமல் இருத்தல் என்று பொருள்.

இப்படி சொல்வதிலிருந்து விளங்குவது இது தான்.

அமுக்க அதாவது அம் என்பதற்கு மறைவது அல்லது உள்ளே என்பதே பொருள்.




மாலை கதிரவன் மறைவதையும் உள்ளே சொல்வதைப் போன்ற உணர்வை உணர முடிகிறது.

அந்தக் காலை கதிரவனை விட மாலை கதிரவன் தான் அழகாக, அமைதியாக,மறைவதைக்
கண்முன்னே கண்ட ஆதிமாந்தன்




அந்தத் தீ அதாவது மாலை கதிரவனை

அம் + தீ = அம்தீ = அந்தீ = அந்தி என்று அழைத்தான்.

மாலை கதிரவனை அழைத்த அந்த அந்தி என்னும் சொல் பிறகு கதிரவன் மறையும் பொழுதைக் குறித்தது.

அம்+தீ+பொழுது = அந்திப்பொழுது

இப்படி தான் கதிரவனின் மாலைப்பொழுது அழைக்கப்பட்டது.


இந்தச் சொற்களில் எத்தனை அழகான, ஆழமான பொருள் உள்ளது.
ஒரு முறை சொல்லிப் பாருங்கள் !!!

காலையில் தோன்றும் கதிரவன் = ஆதி

மாலையில் தோன்றும் கதிரவன் = அந்தி

எப்படி இனிக்கிறது நம்முடைய தமிழ்
என்பதைப் பாருங்கள் !!!!!!!!!!!


தீயில் தோன்றிய தீந்தமிழ்ச்சொற்கள் இன்று பொருள் மாறி

ஆதி என்பது ஆண்டவனையும், அந்தி என்பது மாலைப்பொழுதைக் குறித்தாலும், இதற்கு எல்லாம் அடிப்படை தீ என்னும் எனப்பட்ட கதிரவன் தான்.

காலையில் தோன்றும் கதிரவனைத்தான் ஆதிமாந்தன் எழுந்தயுடன் கண்டது, அதனால்
அதுவே First அதாவது ஆதி என்னும் சொல்லும் உண்டாயிற்று.

மாலையில் தோன்றும் கதிரவனை உறங்கும் முன் கண்டான். அதனால் அதுவே Last அதாவது அந்தி என்னும் சொல்லும் உண்டாயிற்று.

ஆதி அந்தமில்லா அருட் சோதியே என இறைவனைப் பாடுவது, தொடக்கமும் முடியுமில்லாத இறைவனைப் பற்றியே என அறியலாம்.

இதை வேதாத்திரி மகரிசி அவர்கள் அருமையாக சொல்வதைக் காணலாம்.

இதுவரையிலும் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து வாழ்ந்தவன், இப்படி ரசிக்கக் கூடியவனும், எண்ணக் கூடியவனுமான என்னை ஆக்கியவன் யார் என்று தன்னையே திரும்பிப் பார்க்கிறான் பாருங்கள். இதுதான் ஆறாவது அறிவு. அறிவையே அறிந்து கொள்ளக்கூடிய அறிவின் உயர்நிலை ஆறாவது அறிவு.

கடலில் இருந்த தண்ணீர் தான் மேகமாகி மழையாகப் பொழிகிறது. அருவியாக, ஆறாக ஓடும் தண்ணீர் மீண்டும் எங்கே சென்று சேர்கிறது? கடலில் தானே? குளமாக, ஏரியாக அந்த நீரைத் தேக்கி வைத்தாலும் புடைத்துக் கொண்டே இருக்கும் அது. கரை உடைந்தால் தன் மூலமான கடலை நோக்கியே விரைந்தோடும். கடலை அடையும்வரை அதற்கு ஓய்வு, அமைதி இல்லை.

இதுபோன்றே, மெய்ப்பொருளே (பிரம்மமே) அணுவாக, பஞ்ச பூதமாகி, ஜீவனாகி, மனிதனாகி இருக்கிறது. அவையெல்லாமே இடைநிலை தான். இனி மனிதன் ஆறாவது அறிவு மேலோங்கப் பெற்று அவன் தன்னிலையை, தான் பிரம்மம் என்ற நிலையை அடைந்தாக வேண்டும். அதுவரை மனிதனுக்கு அமைதி கிட்டாது. எதை அடைய வேண்டுமோ அதை அடையாதவரை வேறெது கிட்டினும் மனக்குறை மனிதன் உள்ளத்தில் தலையெடுத்துக் கொண்டே தான் இருக்கும். அடைய வேண்டியதை அடைந்து அமைதி பெறுவோம்.

எத்தனை உண்மை பாருங்கள் !!!!!!!!!!!!!!


உள்ளம் அமைதி அடையும் போது
இல்லத்திலும்
இதயங்களிலும்
இவ்வுலகில் மகிழ்ச்சி நிலவுகிறது.


இனி யாரும் ஆதியும், அந்தியும் அன்னிய மொழிச் சொற்கள் என்று சொல்ல வேண்டாம்.
அத்தனையும் அழகான அன்னைத்தமிழ்ச்சொற்களே.


( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வை உங்களுக்கு விளக்கமாக, விரிவாக அடியேனால் எழுதப்பட்டுள்ளது. )

3.ஆதி


(ஆதி என்பது தமிழ்ச்சொல் தான் என்பதற்கான இடுகை )




ஆதிவாசியாக அலைந்த மாந்தனுக்கு இரவோ அச்சத்தைத் தந்தது, பகலோ பயத்தைப் போக்கியது. காலையில் எரிந்து மாலையில் அணையும் தீயாக தான்
கதிரவன் அவன் கண்ணுக்குக் காட்சி அளித்தது. இப்படி இருட்டை விலக்கி ஒளியை அளித்த பகலவனை ஆதிமாந்தன் கடவுளாக காண ஆரம்பித்தான்.



இப்படி தான் தீ என்பது அவனின் தெய்வம் ஆனது.

தீ-தெய்- தெய்வம்
தீ-தே- தேவு- தேவன்

இதனை ஒவ்வொரு மொழியிலும் காணலாம்.

இலத்தீனில் - deus
சமசுகிருத்தில் - deva
செர்மனில் - tiwaz, tyr
பாலி மொழியில் - தீயுத்
பிராகிருத மொழியில் - Joi, Jyot

முதலில் நெடில் தோன்றி தான் குறில் தோன்றியது என்று சொல்லப்படும்.

அதைக் குழந்தைகளின் , கன்றுகளின் மொழிகளில் காண முடியும்.

இதனால் தான் ஆ என்பதற்கு முதல், தொடக்கம் என்று பொருள் உண்டாயிற்று.

தீயைக் காணும்போது அது பயத்தினால் மட்டுமல்ல பார்த்தாலே வருவது, "ஆ! தீ " அல்லது " ஐய்யோ ! தீ " என்பது தான். ஏனென்றால் காலையில் எழுந்தயுடன் ஆதிமாந்தன் கண் முன்னே கண்ட காட்சி
அந்தத் தீ ( கதிரவன் ). தான்

அந்தத் தீ அதாவது காலை கதிரவனை ( கடவுளை )ஆதீ என்று அழைக்க ஆரம்பித்தான்.

அந்தத் + தீ அல்லது ஆ + தீ = ஆதீ

ஆதீ - ஆதி

இப்படி தான் ஆதி என்ற சொல் பிறந்தது. அது ஒரு தமிழ்ச்சொல் தான்.

(ஆதி = காலையில் தோன்றும் கதிரவன் அல்லது கடவுள் )

உழவிற்கும் வாழும் உலகிற்கு ஒளியை அளித்த கதிரவன் ஆதிபகவன் எனப்பட்டான்.

கதிரவன் காலையில் தொடங்கி, மாலையில் மறையும் வரையான பொழுதை அழைக்க சொல் தேவை பட்டது. அப்பொழுதும் அவனுக்கு அந்தத் தீ தான் நினைவிற்கு வந்தது. இப்படி தான்

தீ- தீனம்-தினம்

என்றும் சொல் தோன்றியது.

இதை உலக மொழியில் அனைத்திலும் காணலாம்.

Dies - இலத்தீனில்
Dydd - வேல்சு மொழியில்
Day - ஆங்கிலத்தில்
Dygn - சுவீடன் மொழியில்
தர்ரோஜ் - குசராத்தியில்


உண்மையில் Day என்பதற்கு அகராதி அளிக்கும் பொருள் "The time between sunrise and sunset " or "half of the day that is not night " இதை Daytime என்னும் சொல்லில் பார்க்கவும்.

ஆனால் அது பொருள் மாறி 24 மணி நேரத்தையும் அதாவது முழுநாளையும் குறித்தது. On which day? என்று சொல்லக் காணலாம். ( मेरा जन्म दिन्- இந்தியில் )




( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரையைத் தழுவி எழுதப் பட்டது )

2.சோடி, சோடிப்பு, சோடனை


( சோடி, சோடிப்பு, சோடனை என்பது எல்லாம் தமிழ்ச்சொற்கள் என்பதை விளக்கும் இடுகை )




(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

பெண், மாப்பிள்ளைகளைச் சோடிப்பது, " திருமணத்தன்று " நிகழ்வது. அழகுசெய்வது, புனைவது இவையே, " சோடித்தல் "சொல்லிற்குப் பொருளாக இருக்க முடியும்.

நிலத்தில் நடக்கும்போது பாதம் பதிந்துவிடுகின்றது. இந்தப் பதிவு சுவடு எனவும் சொல்லப்படும், வண்டிகள் மண்தரையை அறுத்துக்கொண்டு சொல்கின்றன; அங்கும் சுவடு தோன்றுகிறது. இந்த வண்டிச் சுவடு, பேச்சு வழக்கில் சுவடு - சொவடு - சோடு - சோடை - சோட்டை என்று ஊர்தோறும் பேசப்படுவதுண்டு. வண்டியைச் சோட்டையில் பார்த்து ஓட்டு என்று சிற்றூர் மக்கள் பேசுவர்.

பதிவு என்று பொருளுடைய " சுவடு " ச் சொல்லின் வழி வந்ததே இந்தச் சோடித்தல் சொல்லும். ஒர் அழகான பெண்ணை மனத்தில் வைத்துக்கொண்டு, மணவறையில் அமர்ந்திருக்கும் பெண்ணை அழகுசெய்கின்றோம். மனத்திலிருக்கும் சுவடு அதாவது பதிவு பெரிது ; அதை நோக்கியே இங்குப் புனைவு செய்யப்படுகின்றது. சுவடு - சுவடிப்பு - சோடிப்பு என்பதே இச்சொல்லின் வரலாறு.

நாம் ஒருவரிடம் வெற்றோலையையும் எழுத்தாணியையும் கொடுத்து பிறிதொரு ஓலையில் உள்ள வரிகளை அப்படியே எழுதித்தரும்படி கேட்கிறோம். அவர் அப்படியே, முன்னிருந்த ஓலையில் உள்ளதை உள்ளபடியே பார்த்து எழுதிக் கொடுத்துவிடுகின்றார். இவ்வாறு புதிதாக எழுதிக்கொடுத்த ஓலைக்குத்தான் " சுவடி " என்பது பெயர். முந்தைய ஓலையின் சுவடு, அப்படியே புத்தோலையில் பதியப்பட்டதல்லவா !



முன்னிருந்த ஒரு பொருளைப் பார்த்து அப்படியே செய்வதை ஆங்கிலத்தில் " Duplicate " எனக் கூறுகின்றோம். ஒன்றிலிருந்து பிறிதொன்று வரும்போது , ஒரு பொருள் இரண்டாகிவிடுகின்றது. இதனால்தான் இரண்டு என்று பொருள்தரும் " Duo " என்ற சொல்லிலிருந்து இந்த " Duplicate " என்ற சொல் வருவதாயிற்று.


Duplicate - like its close relative double, Duplicate comes ultimately from Latin duplus -
" two fold ", a compound adjective based on Latin " Duo " - two.
Dictionary of world origin

முன்னிருந்த சுவடாகிய பதிவிலிருந்து பின்னமொரு பதிவு வந்தால், இப்பொழுது பொருள் இரண்டாகிவிடும் அல்லவா ? . இந்த வகையிலேயே தமிழில் சுவடுச் சொல் சுவடு - சொவடு - சோடு - சோடி என இரண்டு பொருள்தரும் சொல்லையும் ஈன்றது. இருவராய் இருக்கும் மணமக்கள் சோடியாவதும், இரண்டாயிருக்கும் மிதியடி சோடு ஆவதும் எல்லாம் " சுவடி " வழி வந்தனவே.




சுவடி, சோடி, சோடிப்பு என்ற சொற்களுக்கெல்லாம் இப்படி தெளிவான வரலாறு இருக்க, ஜோடி, ஜோடிப்பு, ஜோடனை என்றெல்லாம் வாய் கோணித் தமிழன் பேசலாமா ?
 

இவையெல்லாம் தமிழ்ச்சொற்களே Copyright © 2009 Flower Garden is Designed by Ipietoon for Tadpole's Notez Flower Image by Dapino