Tuesday 18 August 2009

8.காரணம் - காரியம்


ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (Karya)என்னும் வேற்றுமொழிச்சொல்லும் காரணம்,காரியம் என்று தமிழில் திரிந்தாகக் கூறுவார்கள்.காரண காரியம் என்பதை தூண்டுதலும் துலங்கலும் Cause and Effect எனக் கூறலாம். ஒரு செயலைச் செய்வதற்கான மூலம் (Essential element) தேவைப்படுகிறது.அம்மூலத்தின் விளைவாக செய்கை (Action) நிகழ்கிறது.காரணம்,காரியம் என்னும் சொற்கள், தமிழ்ச்சொற்கள் என்பதை விரிவாக காணலாம்.

மழை பெய்வதால் ஏரி,குளம் போன்ற நீர்நிலைகள் நிறைகின்றன.இது காரியம் ஆகும். நீர்நிலைகள் நிறைய முகில் கூட்டங்களே மூலமாய் உள்ளன. இது காரணம் ஆகும்.எளிமையான இந்த எடுத்துக்காட்டில் அடங்கியிருக்கும் ஆழமான பொருளை நோக்கலாம்.கார் என்பது, மழை,முகில் என்ற பொருளைத் தரும் தமிழ்ச்சொல்லாகும்.



கரு ‍- கருமை - கார் என விரியும்.
கார்காலம் = மழைக்காலம்
கார்முகில் = கரியமுகில்
கார் என்னும் தமிழ்ச்சொல்,சொல்லப்படும் இடத்திற்கேற்றவாறு,முகில்,மழை என்னும் பொருள் கொள்ளப்படும்.

அணம் என்ற சொல்லுக்கு உயர்வு,மேலே (Up,High)என்றவாறு தமிழில் பொருளுண்டு.
அன் என்ற மூலச்சொல்லின்று அணம்,அணா,அன்னம்,அண்ணி,அண்ணன்,அண்ணல் போன்ற சொற்கள் விரிவடைகின்றன.

அணா - அன்னம் : மேல்வாய்
அண்ணன் - உடன் பிறந்தவரில் மூத்தவர்
அண்ணல் - உயர்ந்தவர்
அணிகம் - உயர்ந்த பல்லக்கு
அணா -அணி :உடலின் மேலே அணியும் ஆடை,நகை

கார்+அணம்

கார் - முகில்
அணம் - மேலே
மேலே உள்ள முகில் கூட்டம் மழை பெய்ய காரணம் ஆகிறது.

அயம் என்பது நீர்நிலை,குளம்,ஏரி என விரியும்
கார் அயம் = நீர் நிறைந்துள்ள குளம்.

யா என்பது நீரைக் குறித்த தொல்தமிழ்ச்சொல்லாகும்.
யா - யம் - அயம் என விரிந்தது.

அயம் = தமிழில் சொல்லப்பட்ட நீர்நிலைக்கான சொல்.

யம் (Yam) = ஏரி,கடலைக் குறித்த எகிப்தியச்சொல்.

யா(Ea) = கடலைக் குறித்த பாபிலோனியச் சொல்.

யா என்றே தொல் தமிழ்ச்சொல்லின்றே , யம் - அயம் போன்ற சொற்கள் விரிந்தன.

கார் அணம் = நீர் தோன்றுவதற்கான மூலம் ( Cause,Origin,Source)

கார் அயம் = மூலத்தின் செயல்பாட்டு விளைவு (Operation)

வானத்தில் கார் முகில் தோன்றுவது காரணம்

நிலத்தில் மழையாகப் பொழிவது காரியம்

கார்+அயம் என்பது காரயம் எனப்படும்.
காரயம்,காரியம் எனவும் திரியும்.

மழையும்,முகிலையும் எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு உருவான தமிழ்ச்சொற்களே காரணம், காரியம் என்பனவாகும்.

( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரை )
 

இவையெல்லாம் தமிழ்ச்சொற்களே Copyright © 2009 Flower Garden is Designed by Ipietoon for Tadpole's Notez Flower Image by Dapino